கலாநிதி மாறனை வாழ்த்துகின்றேன்

>> Tuesday, November 28, 2006

எனது நண்பர் ஆனந்துடன் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது, எங்களின் அரட்டையிலிருந்து சில துளிகள்....

செய்தி : தற்போது வெளியாகியுள்ள Forbes இந்திய பணக்காரர்கள் பட்டியலில் கலாநிதி மாறன் 20 ம் இடத்தை பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.9 பில்லியன் டாலர்கள்.

கலாநிதி சிறந்த பணக்காரராக வந்தது எனக்கு மிகப் பெருமைதான் ஆனால் அவரது துறைதான் சற்று இடிக்கிறது.

இதுவே அவர் மிட்டல் மாதிரி ஸ்டீல் துறையிலோ, அசீம் பிரேம்ஜீ மாதிரி சாப்ட்வேர் துறையிலோ, அம்பாணி மாதிரி பெட்ரோ கெமிகல் துறையிலோ வளர்ந்திருந்தால் எந்த கேள்வியும் எங்குமே வந்திருக்காது

மற்ற துறைக்கும் மீடியாவிற்கும் வித்தியாசம் உண்டு. மற்ற துறைக்கு மக்களின் சிந்தனைகளை, கருத்தை மாற்றும் சக்தி இல்லை, மீடியாவிற்கு அது உண்டு

அரசியல் சார்ந்தவர்கள் மீடியாவை கையில் வைத்திருக்கக்கூடாது என்ற தார்மீகம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புஷ் எந்த டி.வியையும் நடத்த வில்லை, டோனி ப்ளேர் எந்த பத்திரிக்கையையும் நடத்தவில்லை.

இந்த கட்சிக்காரர்கள் கையில் மீடியா என்ற தவறான முன் உதாரணம் நம் அண்டை மாநிலங்களில் கூட கிடையாது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பத்திரிக்கைத்துறை வர்ணிக்கப்படுகிறது. அரசியல் என்பது வேறொரு தூண். அரசியலை விமர்சிக்கவேண்டியதும், முறைபடுத்தவேண்டியதும்தான் பத்திரிக்கைகளின் கடமை. அதற்கு அவை அரசியலுக்கு அப்பாற்பட்டுத்தான் இருக்கவேண்டும். இந்த தார்மீகம் உலகில் உள்ள ஜனநாயக நாடெங்கிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அரசியல்வாதிகளே ஜனநாயத்தின் நான்காவது தூணையும் கையில் எடுத்துக்கொண்டால் இதை இந்திய ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகவே நான் பார்க்கிறேன். ஜனநாயத்தின் நான்காவது தூண் பலவீணப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

கட்சி ஆதரவு பத்திரிக்கைகள் ஒரு சில இடங்களில் உண்டு, ஆனால் நேரடியாக கட்சிக்காரர்களே பத்திரிக்கை நடத்தும் கூத்து, அதுவும் முன்னனி வெகுஜன பத்திரிக்கையாக தொலைக்காட்சியாக இருக்கும் அவலம், உலகத்திலேயே நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் உண்டு

இதில் சன் டீ.வி. மட்டும் அல்ல, ஜெயா டி.வியும் குற்றவாளிதான். ஆனால் இந்த கட்சி சார்ந்த மீடியா கலாசாரத்தை முதலில் புகுத்தியது சன் டீ.வி என்பதை யாரும் மறுக்க முடியாது.ஜெயா டி.வி, பின்பு சன் டீவிக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றுதான்.

சாப்ட்வேர் தொழில் தொடங்கினால், அதற்கு நுகர்வோரை பிடிக்க சிரமப்படவேண்டியிருக்கும். ஸ்டீல் தொழில் தொடங்கினால் அதற்கும் நுகர்வோரை பிடிக்க சிரமப்பட வேண்டியிருக்கும். இதுபோன்ற கஷ்டங்களை படாமல், திமுககாரர்களை முதலீடாக வைத்து அவர்களை நம்பி எளிதாக தொடங்கப்பட்டதுதானே சன் டீ.வி. அதன் பின் திமுகவினரின் எண்ணிக்கையை அதிகரிக்க பாடுபட்டதும் சன் டீவியின் நோக்கத்தில் ஒன்றுதானே?

இதுபோன்ற கட்சியின் முதலீட்டில் வளர்ந்த ஒரு தொழிலதிபரையும், ஏழையாக பெட்ரோல் போடும் பாயாக இருந்து இந்தியாவின் முண்ணனி தொழிலதிபராக வளர்ந்த அம்பாணி போன்றவர்களையும் ஒப்பிடுவதே தவறு என்று நான் எண்ணுகிறேன்.

தமிழகத்தில் எந்த தொலைக்காட்சியிலும் செய்தி நடுநிலயாக இருக்காது என்ற எண்ணத்தையும். ஒரு செய்தி தெரியவேண்டுமென்றால் பல தொலைக்காட்சி செய்திகளை பார்த்துவிட்டு நாமே உண்மையை ஊகித்துக்கொள்ளவேண்டும் என்ற கேலிக்கூத்து கலாசாரத்தையும் தமிழகத்தில் கொடியேற்றி வைத்தது சன் டீ.விதானே? உலகத்தில் இதுபோன்று எங்காவது இருக்கும் என்று நம்புகிறீர்களா?

ஒரு கட்சிக்காரரின் கையில் மீடியா இருப்பது, அதுவும் சிறந்த மீடியா இருப்பது, ஒரு மாநிலத்தின் மக்களையே ஒரு கட்சியின் கீழ் கொண்டுவரும் முயற்சிதானே. இது சரியா? என்பதை மட்டும் சிந்தியுங்கள். அரசியல் சார்ந்தவர்கள் மீடியாவில் வளர்வது, மாநிலத்திற்கு ஆரோக்கியமானது என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? நான் நம்பவில்லை. அந்த கட்சி சார்பானவர்கள் வேண்டுமானால் இந்த அவலத்திற்கு வக்காளத்து வாங்கலாம். ஒரு சாதாரண தமிழ்நாட்டு குடிமகன் என்ற பார்வையில் இதை தமிழ்நாட்டின் அவலமாகவே நான் பார்க்கிறேன்.

மற்றபடி கலாநிதி மிகப்பெரும் செல்வந்தராக வந்தது எனக்கு மகிழ்ச்சியே.இதுவே அவரின் துறை வேறாக இருந்திருந்தால் இன்னும் பெருமைகொள்ளலாம்.

நான் மேற்கூறிய கருத்துக்களில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள முடிந்தவர்கள் புரிந்துகொள்ளுங்கள். புரிந்துகொள்ள முடியாதவர்கள் விட்டுவிடுங்கள்.

2 comments:

Gurusamy Thangavel November 28, 2006 1:27 PM  

இக்கருத்தில், நானும் உங்களுடன் உடன்படுகிறேன்.

MGS April 25, 2009 1:31 PM  

உங்கள் கருத்தை படித்தேன். நீங்கள் சொல்வது சரி. அனால் இங்கு உள்ள அரசியல்வாதி என்ற பூனைக்கு யார் மணி கட்டுவது????????????

சிறு குறிப்பு. - ஜெயா டிவி க்கு முன்பே ஜேஜே டிவி என்று இருந்தது.

counter